தமிழ்மணம் அறிவிப்புகள்

Wednesday, June 28, 2006

Template Improvement Tool

தமிழ்மணம் அளிக்கும் தமிழ் அடைப்பலகை மேம்படுத்தும் கருவி (Template Improvement Tool).

அழகான ஒரு அடைப்பலகை கிடைக்கிறது; அதைப் பயன்படுத்த ஆசை; ஆனால் 'யார் இனி இதை எடுத்து தமிழுக்குத் தக்கதாக்கி, சொற்களைத் தமிழாக்கி, பதிவு கருவிப்பட்டை நிரலைச் சேர்த்து, தொடுப்புகளைச் சேர்த்து....' என்று யோசிக்கிறீர்களா? அந்தக் கவலை இனி இல்லை.

1000வது வலைப்பதிவு தமிழ்மணத்தில் சேர்க்கப்படுவதை முன்னிட்டு தமிழ்மணம் வழங்கும் இந்தப் புதிய கருவி மூலம் எந்த ஆங்கில ப்ளாக்கர் அடைப்பலகையையும் தேவையான மாற்றங்கள் செய்து உடனடியாக புதிய அடைப்பலகை செய்யலாம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் மூல அடைப்பலகையின் நிரலை ஒத்தி எடுத்து ஒட்டவேண்டியது, தேவைப்படும் மாற்றங்களைத் தெரிவு செய்யவேண்டியது, அவ்வளவுதான் ஒற்றைச் சொடுக்கில் புதிய அடைப்பலகை தயார்.

இந்தக் கருவி செய்யும் மாற்றங்களால் கிடைக்கும் பலன்கள் கீழே தரப்பட்டுள்ளன. (நன்றி: காக்க-காக்க)
  1. View->Encoding-> Unicode (UTF-8) என்று மெனுவில் தேர்வுசெய்யாமலேயே எடுத்த உடனே வலைப்பூ தமிழில் தெரியும். பலர் வலைப்பதிவில் இந்தப் பிரச்னை இல்லை என்றாலும், இன்னும் சிலருடையது உடனே தெளிவாகத் தெரியாமல் பூச்சி காட்டும். இனி அந்தத் தொல்லை இல்லை.
  2. விண்டோஸ் 98 கணினியிலும் யுனிகோடு எழுத்துரு (உ.ம். லதா) இல்லாமலேயே தமிழில் தெரியும். இப்போது பலருடயது உலாவி மையங்களில் கட்டம் கட்டமாய்த் தெரிகிறது. இயங்கு எழுத்துரு நுட்பத்தால் (Dynamic Font technology) இது நடக்கிறது. (சகோதரர் உமருக்கு நன்றி)
  3. கிழமை, மாதம் போன்றவையும் தமிழில் தெரியும். இந்த ஜாவாஸ்க்ரிப்ட் எழுதினவருக்கு நன்றி. (யார் என்று சரியாகத் தெரியவில்லை)அது க்ருபாஷங்கரும் சுரதாவும் என்று ஒரு நண்பர் தகவல் அனுப்பியுள்ளார்.அவர்களுக்கு நன்றி.
  4. முக்கியமான தமிழ் வலைப்பதிவு/விக்கிப்பீடியா தளங்களுக்கு சுட்டியும் சேர்க்க வசதி.
  5. Links, Archives, About Me, Comments போன்ற முக்கியமான தலைப்புகள் தமிழில் இருக்கும். FireFox-ல் உடையாமல் தெரியும்
  6. மறுமொழிகள் (பின்னூட்டங்கள்) பகுதியில் ஒருத்தர் எழுதியதுக்கும் இன்னொருத்தர் எழுதியதுக்கும் இடையில் ஒரு கோடு வருமாறு ஏற்பாடு. பலசமயம் இந்தக் கோடு இல்லாத டெம்ப்ளேட்டுகளால் யார் என்ன எழுதினார் என்று குழப்பம்.
  7. தமிழ்மணம் அளிக்கும் மின்னூல் (pdf) வசதிக்கான குறிச்சொற்கள் (tags) சரியான இடத்தில் சேர்த்தல்.
  8. தமிழ்மணம் கருவிப்பட்டைக்கான நிரல்துண்டும் சரியாக சேர்க்கப்படுதல்.
  9. Comments பகுதியில் Homeக்கு சுட்டி இருக்கும், அதுவும் தமிழில் இருக்கும்

பயன்படுத்தி குறை-நிறை தெரிவியுங்கள்.

Monday, June 19, 2006

ஏன் ஏன் ஏன்?

அன்புள்ள தமிழ்மணம் பயனாளர்களுக்கும் வலைப்பதிவர்களுக்கும் வணக்கம்.

காலையிலிருந்து ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது, 'தமிழ்மணம்.காம் தளம் விறபனைக்கு' என்று. உண்மைதான், விளையாட்டல்ல. என் தொழில் நிமித்தமாக நான் முழு ஈடுபாட்டுடன் வேறு சில பணிகளில் ஈடுபட்டுள்ளேன். ஒரு நண்பர் ஒரு முறை சொன்னதுபோல 'தொழில்நுட்பமும், மொழியார்வமுமே' தமிழ்மணத்தில் என்னைச் செலுத்தியது. இன்று தமிழ்மணம் தளத்தை மேற்கொண்டு நடத்த இந்த இரண்டையும் விட பல கூடுதல் தேவைகள் இருக்கின்றன. என்னை இவ்வழியில் செலுத்தி இந்தத் தளத்தை உருவாக்கவும், மேம்படுத்தவும் நடத்தவும் என்னைப் பணித்த என் நம்பிக்கைகளே இன்று என்னை வேறு வழியில் செல்லவும் பணிக்கின்றன. என் நம்பிக்கைகள் மட்டுமே எனக்கு ஆசான். அவை என்றும் நிலையானவையல்ல என்ற போதும்!

இந்த உத்தேசக் கைமாற்றத்தால் ஒரு வலைப்பதிவருக்கு என்ன பயன், அல்லது இழப்பு? எதுவுமில்லை. என்னால் இயன்றவரையில் இந்தத் தளத்தை இதே வகையில் தொடர்ந்து நடத்த முன்வரும் அமைப்பு/தனியாள் ஒருவரிடமே நான் இதைக் கொடுப்பேன். எனவே தமிழ்மணப் பயனாளிகளுக்கு உடனடியாக எந்த அதிர்வும் இருக்காது என்று உறுதி கூறுகிறேன்.

ஏன்? என்ற கேள்விக்கு விடையளிப்பது சாத்தியமில்லை. இந்த விடைகள் தொடங்கப்போகும் வினாக்கள்... அந்தச் சுழலில் விழ நான் தயாரில்லை.

உங்களில் ஒருவரோ, அல்லது பலர் சேர்ந்த அமைப்போ முன்வந்தால் மிக்க மகிழ்ச்சியே. ஏற்கனவே சிலர் இந்த ஆர்வத்தை என்னிடம் வெளியிட்டிருக்கிறார்கள். அதுவே கூட நடக்கலாம். மேலும் ஆர்வமுள்ளவர்கள் முன்வந்தாலும் பரிசீலிப்பேன். எல்லாரையும் எல்லாப் பொழுதுகளிலும் திருப்திப்படுத்த முடியாது என்பதால், இதை மட்டும் சொல்லி நிற்கிறேன். என்னோடு நட்புடன் இதுநாள்வரை ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. நல்லதே நடக்கும். நம்புவோம்.

Friday, June 02, 2006

ஆள்மாறாட்டப் பின்னூட்டங்கள் குறித்து

அண்மையில் தமிழ்வலைப்பதிவுகளில் சில ஆள்மாறாட்டப் பின்னூட்டங்கள்/மறுமொழிகள் வர ஆரம்பித்திருக்கின்றன. அறிந்தோ அறியாமலோ மட்டுறுத்தலைப் பாவிக்கும் பதிவர்கள் கூட இவற்றை அனுமதித்துவிடுகின்றனர். தனிமனிதர்களின் விழும்பத்தைப் (image) பாதிக்கவென்று அமையும் இந்த இழி செயலைத் தமிழ்மணம் ஆதரிக்காது.

மேற்சொன்ன ஆள்மாறாட்டப் பின்னூட்டங்களைச் சம்பந்தப்பட்டவரோ பிறரோ தெரிவித்த பிறகும் நீக்காமல் நீங்கள் வைத்திருந்தால் உங்கள் பதிவுக்கு 'மறுமொழி நிலவரச் சேவை' நீக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் முதலில் அப்பின்னூட்டங்கள் இருக்கும் வலைப்பதிவர்களுக்கு எழுதி அவற்றை நீக்கக் கேட்டுக் கொள்ளவேண்டும். போதிய கால அவகாசத்திற்குப் பிறகும் அவை நீக்கப்படாமல் இருக்குமானால், தமிழ்மணத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட பதிவின் 'மறுமொழி நிலவரச் சேவை' முடக்கப் படும்.

அவரவர் வலைப்பதிவின் பின்னூட்டங்களை வெளியிடுவதும் நீக்குவதும் அவரவர் உரிமையே என்பதில் தமிழ்மணத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை. இந்த அறிவிப்பு தமிழ்மணத்தின் ஒரு பொள்ளிகையைப் (policy) பற்றியும் அது வழங்கும் ஒரு சேவையைப் பற்றிய தெளிவுமே.

புரிந்துகொள்ளலுக்கு நன்றி.