தமிழ்மணம் அறிவிப்புகள்

Sunday, December 18, 2005

வழங்கி மாற்றம் நிறைவுபெற்றது

தமிழ்மணம் தளம் இயங்கும வழங்கி (சர்வர்) இடம் பெயரும்போது சில தடங்கல்களை எதிர்பார்த்தோம். ஆனால் கிட்டத்தட்ட இடையூறு இல்லாமல் இந்த வழங்கி மாற்றம் நிறைவடைந்துவிட்டது. மறுமொழி நிலவரம் காட்டுவதில் சில குழப்பங்கள் நேர்ந்திருக்கலாம், மற்றபடி எதுவும் இழப்பில்லை. கடைசிநாளன்று அளிக்கப்பட்ட வாக்குகளும் கணக்கில் வராமல் போய்விட்டன. பொறுத்துக்கொள்ளுங்கள். கடைசியாக பட்டியலில் சேர்க்கப்பட்ட சில பதிவுகள் இப்போது இன்னும் சேர்க்கப்படாதவை போலத் தெரியும். அவற்றையும் கூடிய விரைவில் சரி செய்யப்படும். புதுப் பதிவுகளை பட்டியலில் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள் சற்று பொறுத்தால் நல்லது. புத்தாண்டில் புது நடைமுறையில் சேர்க்கலாம்.

இந்த மாற்றத்தினால் விளைந்த ஒரு குறை: இப்போதைக்கு பதிவுகள் திரட்டப்பட 2 மணி நேரம் வரை ஆகலாம். மேலும் தங்கள் பதிவு விட்டுப்போனதாகக் கருதும் பதிவர்கள் தமிழ்மணம் கூகிள் குழுமத்திலோ, அல்லது தனி அஞ்சலிலோ தெரிவிக்க வேண்டுகிறேன். ஏற்கனவே எழுதியிருந்தாலும் இன்னொருமுறை எழுதி உதவுங்கள்.

நன்றி.

அடுத்து இம்மாத இறுதியில் ஒருமுறை தடங்கல் வர வாய்ப்பிருக்கிறது.

Thursday, December 15, 2005

தமிழ்மணம் தள வழங்கியில் மாற்றம்

தமிழ்மணம்.காம் சேவை இத்தனை நாள் இயங்கிக்கொண்டிருக்கும் வழங்கியிலிருந்து வேறு வழங்கிக்கு மாறுகிறது. ஒரு தனியாள் தன் தேவைகளுக்காக பாவிக்க என்று அளிக்கப்பட்ட (இலவச) சேவை ஒன்றில் ஆரம்பித்து, பிறகு பொதுப்பயனுக்கு வந்ததால் தேவை அதிகமாகி, ஒரு குறைந்த கட்டண சேவைக்கு மாறியது. மேலும் மேலும் பதிவுகளின்/வாசகர்களின் எண்ணிக்கை அதிகமானதால் வழங்கியின் பளு தாங்கமுடியாத அளவுக்குப் போய்விட்டதாகவும், இனியும் இந்தத்தளம் தற்போதைய வழங்கியில் தொடரமுடியாதென்றும் சேவையளிப்போரிடமிருந்து ஓலை வந்து ஒருமாதமாகிவிட்டது. எனவே இந்த சுரண்டலை நிறுத்திக்கொண்டு முழு வழங்கியை வாடகைக்குப் பிடித்தாயிற்று. அதற்குக் குடிபெயர்வது நடந்துகொண்டிருக்கிறது. இதனால் அடுத்த சில நாட்களில் இடையிடையே சேவையில் தடங்கல் ஏற்படலாம். பொறுத்துக்கொள்ளவேண்டுகிறோம்.

மேம்பட்ட வசதிகளோடு தமிழ்மணம் சேவையின் புதுப்பதிப்பை வெளியிடவும் நாள் குறித்தாயிற்று. ஆனால் அதற்குள் எதிர்பாராதவிதமாக இந்த ஓலை! இருப்பினும் கூடிய அளவு மேம்பாட்டுடன் புத்தாண்டில் புது தமிழ்மணம் மணக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்காரணமாக டிசம்பர் 25 முதல் ஜனவரி 1 வரை இடையிடையே தடங்கல்கள் நேரவும் வாய்ப்பிருக்கிறது.

புது வசதிகளோடே சில நடைமுறை மாற்றங்களும் வரும். வலைப்பதிவர்கள் பலனை எண்ணி சுமைகளைத் தாங்கி ஒத்துழைக்க வேண்டுகிறேன். எவ்வகையான நடைமுறை மாற்றங்கள் என்பது தக்க சமயத்தில் விளக்கப்படும்.

வலைப்பதிவர் மன்றம் அடிக்கடி வன்முறைக்கு இலக்காவதால் இதற்கு மாற்றாக வேறு ஏற்பாடு செய்யப்படுகிறது. வலைப்பதிவரில் பெரும்பாலானோர் கூகிள் அளிக்கும் ஜிமெயில் பயனாளர்களாக இருப்பதால், கூகிள் குழுமம் ஒன்று தமிழ்மணம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இனி மன்றம் வழியாக நடந்த பரிமாற்றங்களை இந்தக் குழுமம் வாயிலாக நடத்த எண்ணம். இதில் சில அனுகூலங்கள்: தமிழ்மணம் தளம் இயங்காதபோதும் தொடர்புக்கு பயனாகும். கூகிள் பொறுப்பில் இருப்பதால் வன்முறைக்கு நாம் அஞ்சவேண்டியதோ அரண்கட்டுவதோ தேவையில்லை. மேலும், அழகாக அதற்கும் கூகிள் செய்தியோடை பதிப்பிப்பதால் தமிழ்மணம் மன்றம் பக்கத்தில் நடப்புகளை முன்புபோலவே காட்டமுடியும். இப்படிக் காட்டுவது தமிழ்மணம் புதுப் பதிப்பு வெளியாகும்போது முழு நடைமுறைக்கு வரும் என்றாலும், இப்போதிருந்தே இந்த குழுமத்தைப் பயன்படுத்த அனைவரையும் அழைக்கிறோம். இடையே வர இருக்கும் தடங்கல் குறித்தும், இங்கே தகவல் பரிமாறிக்கொள்ள வாய்ப்பிருக்கிறதல்லவா?

தடங்கல் வரும்போது கைகொடுக்க டெக்னோரட்டி முழுதாக உதவாதென்றாலும் நண்பர் ஒருவர் இன்னொரு வலைப்பதிவுகள் திரட்டி அமைத்திருக்கிறார். அதைப்பற்றியும் அறிவிப்பு வெளியாகலாம். அங்கும் உடனடியாக புதிதாக எழுதப்பட்டவற்றை அறிந்துகொள்ளலாம்.

தமிழ்வலைப்பதிவுகள் இன்னும் பரவலாக பயன்பாட்டுக்கு வர இந்த முயற்சிகள் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்று நாம் காணும் வளர்ச்சிக்கு ஆதாரமான நூற்றுக்கணக்கான வலைப்பதிவர்களோடும், ஆயிரக்கணக்கான வாசகர்களோடும், இந்த முயற்சிகளில் ஆர்வத்தோடு பங்கேற்பதில் தமிழ்மணம்.காம் பெருமைகொள்கிறது.

அனைவருக்கும் நன்றி.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
(தமிழ்மணம்.காம் சார்பாக)
-காசி