தமிழ்மணம் அறிவிப்புகள்

Sunday, April 17, 2005

வலைப்பதிவர் மன்றத்தில் நேரடியாகத் தமிழில் உள்ளிட வசதி

இதுவரை வலைப்பதிவர் மன்றத்தில் ஊடாடும்போது எ-கலப்பை போன்ற கருவிகளோ, பொங்குதமிழ் போன்ற வலைப்பக்கங்களில் அமைந்த கருவிகளோ இல்லாமல் தமிழில் எழுத முடியாமல் இருந்தது. தமிழ் எழுத்துப்பெயர்ப்பு/குறியெண்பெயர்ப்புக் கருவிகளில் முன்னோடியான சுரதா யாரும் கேட்காமலேயே தானாக முன்வந்து இதற்கும் ஒரு கருவி செய்து கொடுத்திருக்கிறார். அதை இப்போது சேர்த்திருப்பதால் இனி எந்த கூடுதல் கருவியும் இன்றி நேரடியாக தமிழில் உள்ளிடலாம். அவருக்கு நம் எலலார் சார்பிலும் மனப்பூர்வமான நன்றி.



இன்றுடன் எந்த வலைப்பதிவு நுட்பமானாலும், தமிழ்மணம் சேவைகளானாலும் மன்றத்தில் மட்டுமே கேட்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுகிறது. இவை சம்பந்தமாக எனக்குத் தனிமடலில் யார் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் வராது என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன். அனைவரது ஒத்துழைப்பையும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

Thursday, April 07, 2005

Server Outage

Currently (at 5:45 pm EDT) there is a communication failure with thamizmaNam server. Hope it will be alright soon. Please bear with us till then.

Thanks for your cooperation.

anbudan,
-Kasi

Tuesday, April 05, 2005

க்ரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்

ஒரு நூலோ, கதையோ, கவிதையோ, கட்டுரையோ, ஒருவரால் எழுதப்பட்டவுடன் அதன் முழு பதிப்புரிமை (copyright) அதை எழுதியவருக்கு சொந்தமாகிறது. ஒருவர் © என்று குறியீட்டுடன் அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலுமே இதுதான் நிலை. அவராக அந்த உரிமையை இன்னொருவருக்கோ நிறுவனத்துக்கோ அளித்தால் அந்த ஆக்கத்தின் மீதான பதிப்புரிமை அப்படி அளிக்கப்பட்டவருக்கு வந்து சேருகிறது. இப்படி, 'பதிப்புரிமை ஒரு தனியாருக்கு சொந்தமாக இருப்பது' ஒரு எல்லை எனக்கொண்டால், 'முழுதும் பொதுவுடைமையாக்கப்படுதல்' இன்னொரு எல்லை. இந்த இரு எல்லைகளின் சாதக பாதகங்களை ஆராய்ந்தால்:

தனியாருக்கு முழு உரிமை:

நன்மைகள்:
  1. உரிமையுள்ளோர்க்கான அங்கீகாரம் என்றுமே மறுக்கப்படாது.
  2. ஆக்கத்தை இடைச்செருகல்கள் மூலம் சிதைக்க இயலாது.
  3. உரிமையுள்ளோரைத் தவிர்த்து யாரும் விற்பனை மூலம் இலாபம் அடைய முடியாது.

தீமைகள்:
  1. உரிமையுள்ளோர் தவிர யாரும் மறுவினியோகம் செய்யக் கூடாதாகையால் பரவலாக வாசிக்கப்படுவது தடைப்படுகிறது.
  2. சில (நுண்கலைப் படைப்புகள் போன்ற) ஆக்கங்கள் இன்னொருவரால் மேம்படுத்தப்படவும் வாய்ப்பிருக்கிறது. இந்த முழு உரிமைப் பிரச்னையால் அந்த வாய்ப்பும் தவறிப்போகிறது.
பொதுவுடைமை:

நன்மைகள்:
  1. உரிமைப் பிரச்னைகளால் தடைப்படாததால் இயன்ற அளவில் பரவலாக ஒரு ஆக்கம் வாசிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
  2. சில (நுண்கலைப் படைப்புகள் போன்ற) ஆக்கங்கள் இன்னொருவரால் மேம்படுத்தப்படவும் ஏதுவாகிறது.

தீமைகள்:

  1. ஆக்கியோருக்கு/உரிமையுள்ளோருக்கான அங்கீகாரம் (மேற்கோள் போன்றவை மூலம்) எப்போதும் கிடைக்கும் என்று உறுதி செய்ய இயலாது.
  2. யார் வேண்டுமானலும் ஆக்கத்தை மாற்றி, சிதைக்க வாய்ப்பிருக்கிறது.
  3. உரிமையுள்ளவரைத் தவிரவும் வேறு பலரும் இலாப நோக்கில் வினியோகித்துப் பயன்பெற வாய்ப்பிருக்கிறது.

வலைப்பதிவுகள் போன்ற ஊடகம் வழியாக நான் எழுதுவதன் முழுப்பயனும் கிட்டவேண்டும் என்றால் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பதிப்புரிமை தேவைப்படுகிறது.

அந்த உரிமையில் நான் எதிர்பார்ப்பது:

  1. நான் எழுதுவதை யாரும் நகலெடுக்கவும், மறுபதிப்பு, மறுவினியோகம் செய்யவும் அனுமதி அளிக்க விருப்பம். இதனால் மேலும் பரவலாக என் எழுத்தை நான் கொண்டு செல்ல முடியும்.
  2. நான் எழுதுவதை மேலும் மேம்படுத்த வாய்ப்பிருக்கும் ஒருவரை நான் தடைசெய்ய விரும்பவில்லை. கலை/இலக்கியம்/அறிவியல்/சமூக கருத்துக்களாக நான் படைத்ததுவே என்றும் உச்சம் என்று சொல்லமுடியாது. காலத்துக்கேற்ப சூழலுக்கேற்ப அவற்றை மாற்றியமைக்கவும் மேம்படுத்தவும் நான் தடையாக இருக்க விரும்பவில்லை.

ஆனால் அதே சமயம் நான் இந்த விஷயத்தில் சில கொள்கைகளையும் வைத்திருக்கிறேன். அவை:

  1. எங்கு மறுபதிப்போ, மறுவினியோகமோ செய்யப்பட்டாலும் 'இதன் மூலவடிவம், இன்னார் ஆக்கியதிலிருந்து எடுக்கப்பட்டது' என்ற குறிப்போடு என் பெயர் மேற்கோளிடப்படவேண்டும். என் படைப்பு அனாமதேயமாக உருவிக்கொள்ளப்படக்கூடாது.
  2. நான் இலவசமாக அளிக்க முடிவு செய்தபின் இடையில் யாரும் இதை வைத்து லாபம் சம்பாதிக்கக் கூடாது. எனவே அப்படி மறுவிநியோகம் செய்பவர் நான் ஏற்படுத்தியுள்ள இதே கட்டளைகளின் அடிப்படையில், இலவசமாகவே செய்யவேண்டும்.

இது என் நிலை மட்டுமல்ல. தன் படைப்புகளைப் பொதுப் பயனுக்கு வைக்க எண்ணும் என்னைப்போல எண்ணற்றவர்களின் நிலை. அவர்களின் விருப்பத்தை சட்டபூர்வமான உரிமமாக வரைந்து அளிக்கிறது க்ரியேட்டிவ் காமன்ஸ் என்னும் அமைப்பு. நான் என் வலைப்பதிவுகளின் காப்புரிமையை இதன்படி மாற்றியமைத்திருக்கிறேன்.

என்னைப் போலவே எண்ணும் வலைப்பதிவர்களும் இதைச் செய்யலாம் என்று பரிந்துரைக்கிறேன். நாளை தமிழ்மணம் போன்ற திரட்டிகள் உங்கள் ஆக்கங்களை திரட்டவும், பரவலான வாசகர் வட்டத்துக்கு விநியோகிக்கவும் இந்த உரிமம் அனுமதியளிக்கிறது. பலர் கேட்டுக்கொண்டபடி தமிழ்மணம் தளத்திலிருந்து ஒருவாசகர் தான் தேர்ந்தெடுத்த ஆக்கங்களை பிடிஎஃப் மென்னிதழாக செய்துகொள்ளும் வசதி செய்யப்படும்போது, இந்த உரிமம் அளித்துள்ள வலைப்பதிவுகளை மட்டுமே அந்த தேர்வில் சேர்க்க முடியும்.

இப்படி மென்னிதழாக்கி எடுத்துக்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படாது என்பதாலும், தளத்தைப் பயன்படுத்த சந்தாக் கட்டணம் வசூலிக்கப்படாது என்பதாலும் தமிழ்மணம் அளிக்கவிருக்கும் இந்த சேவை 'இலாப நோக்கிலான விற்பனை'யாகக் கொள்ளப்படமுடியாது என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். அதில் மாற்றுக் கருத்திருப்பவர்கள் தங்கள் எண்ணங்களையும் சொல்லலாம்.

Friday, April 01, 2005

நினைவூட்டல் (நன்கொடை)

இனியும் சமாளிக்கமுடியாது. நானும் முடிந்த அளவு தாங்கிப்பாத்துட்டேன். எத்தனையைத் தான் ஒருத்தனாலே சமாளிக்கமுடியும். 'பத்துப்பேருக்குப் பல்லுக்குச்சி, ஒருத்தனுக்குத் தலைச்சுமை' கேட்டிருக்கோமில்லயா? அதனால இனி உங்க நன்கொடை இல்லாம தமிழ்மணம் தளம் நடத்த என்னால் முடியாது. ஆகவே உங்க நன்கொடைகளை கீழ்க்கண்ட விதங்களில் அளிக்கலாம்.

  1. ஒரு கேள்வி கேட்கும் முன் கொஞ்சம் ஆழமாக படித்து, நாம் எதையாவது விட்டிருப்போமோ என்று ஒரு முறைக்கு இருமுறை சோதித்து, பின் கேட்கலாம்.
  2. அப்படியே கேட்டாலும் பொதுவில் கேட்பதால் இதே கேள்வி மனதில் இருக்கும், அல்லது ஏற்கனவே கேட்டுவிட்ட, பலருக்கும் பதில் கிட்டுமே, என்று பொதுவில் கேட்கலாம்.
  3. $50 000 0000 பெறுமதியுள்ள கூகிள் அளிக்கும் ப்ளாக்கர்.காம் சேவையின் ஓட்டைகள் எத்தனை? அந்த ஓட்டைகள் ஒவ்வொன்றுக்கும் கூகிளுக்கு எழுதிவிட்டு, கையோடு தமிழ்மணம் ஓட்டைகளை எனக்கு எழுதலாம்.
  4. அதி உன்னதமான ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் தமிழ் ஒழுங்காகத் தெரிய வைக்கச் செய்ய மென்பொருள் வல்லமை இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் வல்லமை உள்ளவர்களைக் கெஞ்சி வேலை வாங்க ஒரு பத்து ஓட்டு போட்டுவிட்டு, பிறகு வாசகர் பரிந்துரையில் 'கள்ள ஓட்டு நொள்ள ஓட்டு' கதை பேசலாம்.
  5. மிகவும் அடிப்படையான, இங்கே 100 பேருக்காவது பதில் தெரிய வாய்ப்புள்ள கேள்விகளை 'மன்றம்' என்ற பெயரில் 'தண்ட'மாக நிற்கும் மேடையிலே கேட்கலாம்.
  6. மன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நானே பதில் சொல்லணும் என்று எதிர்பார்க்காமல், பதில் சொல்வது என் ஒருவனின் பிறப்புரிமை என்றில்லாமல், தெரிந்தவர்கள் தங்கள் பொன்னான நேரத்தில் சிறு துளியை ஒதுக்கி, பதிலிறுக்கலாம்.
  7. இன்னும் முதிர்ச்சியடையாத xml தொழில்நுட்பத்தில் இயங்கிவரும் வலைப்பதிவு/திரட்டு போன்றவற்றால் சில சமயம் பிழையான சேவை கிடைக்க வாய்ப்பிருப்பதைப் புரிந்துகொள்ளலாம். தமிழ்மணம் தளத்தின் முதல் வாடிக்கையாளர் நான். எனவே இந்தக் குறைகளைக் களைய இயன்ற விரைவில் முயன்றுகொண்டே இருக்கிறேன். எனவே ஓரிரு முறை அவதானித்த பின், குறை பெரியதாக இருந்தால் மட்டும், தொடர்ந்து நிகழ்வதாக இருந்தால் மட்டும் சுட்டிக் காட்டலாம். அதையும் பொதுவில் வைக்கலாம். தமிழ்மணம் நடவடிக்கையில் எதுவுமே திரை மறைவில் இல்லை.
இந்த நன்கொடைகளை அளித்தால் மட்டுமே தொடர்ந்து என்னால் சேவை அளிக்க முடியும் என்பது கசப்பான உண்மை.

நம்பிக்கையுடன்,
-காசி