தமிழ்மணம் அறிவிப்புகள்

Thursday, April 13, 2006

வலைப்பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி.

அமேசான் (ஆமஸான்) நிறுவனத்தின் ஒரு அங்கமான அலெக்சா என்ற நிறுவனம் வலைத்தளங்களின் பிரபலத்தை அளந்து பட்டியலிடுகிறது. இது பிரபலத்தை அளக்கும் முறையில் குற்றங்குறைகள் இருக்க வாய்ப்பிருப்பினும், வலையுலகில் பரவலான அங்கீகாரத்தை அலெக்சா வரிசைஎண் (Alexa rating) பெற்றுள்ளது. ஒரு தளம் பிரபலங்களின் இறங்குவரிசையில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்பதை அலெக்சா வரிசைஎண் குறிக்கிறது. தற்போது யாஹூ.காம் தளம் முதல் இடத்திலும் கூகிள்.காம் தளம் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. மூன்றுமாதகால இடைவெளியில் ஒரு தளத்தின் தொடர்ந்த பிரபலத்தை அளந்து அதன் சராசரி வரிசைஎண் தீர்மானிக்கப்படுகிறது. இந்த வரிசையில் 100,000 என்பது ஒரு மைல்கல். தொடர்ந்த தினசரி வரிசைஎண் காட்டுதல், வரைபடம் மூலம் வரிசைஎண் மாறுபாட்டைக் காட்டுதல் உள்ளிட்ட பல தகவல்கள் காட்டப்பட இந்த 100,000 என்பது ஒரு எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ளது.

தமிழ்மணம் வலைவாசலின் பிரபலம் ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் முதல் முறையாக தமிழ்மணத்தின் அலெக்சா வரிசைஎண் 100,000-ஐக் கடந்துள்ளது. வெகுசில முழு தமிழ்த்தளங்களே கடந்துள்ள இந்த சாதனையை உங்கள் தமிழ்மணம் கடந்துள்ளதில் முழுப்பங்கு தமிழ்மணத்தில் பங்கேற்கும் வலைப்பதிவுகளையும், தொடர்ந்து வருகைதரும் வாசகர்களையுமே சாரும். இதுவரை இந்த குறியீட்டைக் கடந்துள்ள முழுமையான தமிழ்த்தளங்கள் யாவுமே பலவும் வியாபார நோக்கில் நடத்தப்படுபவையே. அவ்வகையிலும் இது ஒரு சாதனையே. இந்த சாதனை உரைக்கும் செய்தி தமிழ்மணத்தில் இடம்பெறும் வலைப்பதிவுகள் ஒரு மிகப்பரந்த வாசகர் வட்டத்தைக் கொண்டுள்ளன என்பதேயாகும்.
இந்த சாதனையை அனைத்து வலைப்பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் காணிக்கையாக்குகிறோம்.

அன்புடன்,
-காசி
(தமிழ்மணம் நிர்வாகக் குழு சார்பாக)

Tuesday, April 11, 2006

தமிழ்மணம் வழங்கியில் கோளாறு - 11 ஏப்ரல் 2006

அன்புள்ள நண்பர்களே,

11 ஏப்ரல் 2006, இந்திய நேரம் பிற்பகல் சுமார் 2 மணியிலிருந்து தளம் இயங்குவது தடைப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள வழங்கியில் ஒரு கோளாறு. விரைவில் சரி செய்யக்கோரிக்கை விடுத்திருக்கிறோம். செய்வார்கள் என் நம்புகிறோம்.
பொறுத்தருள்க.

Monday, April 10, 2006

தமிழ் இணையக்குழுமங்களுக்கு ஒரு புது நுட்பம்

யாஹூ குழும சேவையில் இயங்கிவரும் பல தமிழ்க் குழுமங்களை இன்றைய வலைப்பதிவுகளின் முன்னோடிகள் எனலாம். அவற்றின் அனுகூலம், ஒருமுறை சிரமப்பட்டு திஸ்கி எழுத்துருவை நிறுவிவிட்டால் பிறகு எந்த சிக்கலும் இல்லாமல் எல்லாவகை அஞ்சல் படிப்பான்களிலும் படிக்கமுடியும் என்பதே. ஆனால் முக்கியமான ஒரு குறை, எளிதில் கூகிள் போன்ற தேடுபொறிகளுக்கு அகப்படாத உள்ளடக்கங்கள் கொண்டவை என்பதே.

இக்குறையை நிவர்த்திக்க கூகிள் குழுமத்தைப் பாவித்து யுனிகோடு தமிழ் வழியாக மடல் பரிமாற்றம் செய்வதில் இன்னும் பலருக்குப் பிரச்னைகள் இருப்பதைப்போன்ற ஒரு தோற்றம் தெரிகிறது. அவர்களும் யுனிகோடு தமிழின் 'தேடுதல், மற்றும் எழுத்துரு இறக்காமல் வாசித்தல்' ஆகிய பலன்களைப் பெற ஹூஸ்டன் திரு நா. கணேசன் அவர்கள் முனைப்பிலும், ஆதரவிலும் தமிழ்மணம் ஒரு கருவியை தயாரித்து நிறுவியிருக்கிறது. இதன்மூலம் திஸ்கியில் இயங்கும் எந்த ஒரு யாஹூ குழுமமும் தங்களுக்கு ஒரு நிழலான கூகிள் குழுமம் ஒன்றை தொடங்கி, தானியங்கிக் கருவி மூலமாக ஒவ்வொரு திஸ்கி அஞ்சலும் நிழற்குழுவில் யுனிகோடில் வருமாறு செய்ய இயலும்.

சோதனைக்காக திரு இலந்தை. ராமசாமி அவர்கள் முன்னின்று நடத்தும் 'சந்தவசந்தம்' யாஹூ குழுவுக்கு நிழற்குழுவாக 'சந்தவசந்தம்' கூகிள் குழு இயங்குகிறது. கூகிள் குழுவில் இடப்படும் அஞ்சல்கள் தமிழ்மணத்தின் தானியங்கிக்கருவி குறியேற்றமாற்றம் செய்த அஞ்சல்கள்.

இதே வகையில் மற்ற யாஹூ குழுமங்களும் இணையான கூகிள் குழுமங்களை ஏற்படுத்தி கூடுதல் பயனைப்பெற, நீங்கள் அந்தக் குழுவின் உரிமையாளரானால், திரு. நா. கணேசனுக்கு அல்லது தமிழ்மணம் நிர்வாகிக்கு எழுதுங்கள். தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி வெளியிடப்படும் இந்த சேவை முற்றிலும் இலவசமானது. யுனிகோடில் எழுதுவதால் கிடைக்கும் பலன்களை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளவே இந்த முயற்சி.

அன்புடன்,
-காசி ஆறுமுகம்.