தமிழ்மணம் அறிவிப்புகள்

Saturday, March 18, 2006

தலைப்புக்களுக்கான தனித்தனி செய்தியோடைகள்.

இதுநாள்வரை தமிழ்மணம் அளித்து வந்த செய்தியோடை ஒன்றுதான். (அதன் வலைமுகவரி எங்கே கொடுக்கப்பட்டது என்று சிலர் நெற்றியை உயர்த்துவது தெரிகிறது...:-)) இடுகைகள் வகைப்படுத்தப்படுவதன் இன்னொரு பலனாக இனிமேல் தனித்தனி தலைப்புகளுக்கான செய்தியோடைகளை இனிப் பெற முடியும். இதன்மூலம், செய்தியோடைவழியாக வாசிப்பவர்கள், தாங்கள் தேர்வு செய்துகொண்ட தலைப்புகளில் மட்டும் புதிதாக எழுதப்பட்டிருக்கின்றனவா என்று அறிந்து தங்கள் நேரத்தை சரியாக செலவிடமுடியும்.

அளிக்கப்படும் அனைத்து செய்தியோடைகளையும் இங்கே காணலாம்.

இத்துடன் இன்னும் சில கூடுதல் பலன்களும் உண்டு. இனிமேல் ஒவ்வொரு இடுகைக்கும் எழுதியவர் பெயர் (<dc:creator> tag) மற்றும் வகை(தலைப்பு) (<category> tag) ஆகியவையும் இனி செய்தியோடையுடன் அளிக்கப்படும். இதனால் சரியான படிப்பான்கள் கொண்டு படிக்கப்படும்போது மேம்பட்ட பயன்பாட்டு அனுபவம் கிட்டும்.

Wednesday, March 15, 2006

ஒரு வேண்டுகோள்.

தமிழ்மணம் சேவையை உபயோகிக்கும் வலைப்பதிவு நண்பர்கள், மறுமொழிகளை தமிழ் மணப் பட்டியலில் காட்டுதல், பட்டியை நிறுவதில் ஏற்படும் சிக்கல்கள், போன்றவை குறித்து விளக்கங்கள் வேண்டி, மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளும் போது, சம்மந்தப் பட்ட வலைப்பதிவு முகவரியையும் குறிப்பிட்டு எழுதுவது நலமாக இருக்கும்.

உதாரணத்துக்கு, ஒருவர், தன் பதிவின் மறுமொழிகள், முகப்புப் பக்கத்தில் தோன்றுவதில்லை என்று சொல்லும் பொழுது, அவர் நாலைந்துக்கு மேற்பட்ட பதிவுகள் வைத்திருக்கும் பட்சத்தில், எந்தப் பதிவில் சிக்கல் என்று சொன்னால்தான், விரைவாக செயல் பட ஏதுவாக இருக்கும்.

"என்னுடையை வலைப்பதிவு தமிழ் மணத்தில் தெரிவதில்லை. please do the needful" என்று வரும் ( சில சமயம் கையெழுத்து கூட இல்லாமல்) ஒற்றை வரி மடல்களில் மின்னஞ்சல் முகவரியில் இருந்து, பெயர்களைத் தேடி, அன்னாரது வலைப்பதிவைக் கண்டு பிடித்து, சிக்கலைச் சரி செய்ய ஆகும் நேரத்தில், அதுக்கு பதிலாக, bike & barrel க்குப் போய், 'உருப்படியாக' நேரத்தை செலவழிக்கலாம் ( அது என்னா எடம் என்று எனக்கு தனிமயிலு உடுவதற்கு பதிலாக, கூகுள் பண்ணி கண்டுபிடிச்சுக்கோங்க) என்று தோன்றிவிட்டால், தமிழ் வலைப்பதிவு உலகமே ஸ்தம்பித்துப் போய்விடதா? நீங்களே சொல்லுங்க..

ஆகவே, நண்பர்களே...

தமிழ்மணச் சேவை குறித்து மின்னஞ்சல் மூலம் விளக்கம் கேட்கும் போது, தங்கள் வலைப்பதிவின் முகவரியை குறிப்பிடும் படி கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, March 09, 2006

வாக்கெடுக்கலாம் வாருங்கள்

தமிழ்மணம் தளத்தில் ஒரு வாக்குப்பெட்டி இயங்கி வருவதைப் பார்த்திருக்கலாம். இந்த வாக்குப்பெட்டி மூலமாக வாக்களிக்க மட்டுமில்லாமல் வாக்கெடுப்பு அமைக்கவும் பயனர்களாகிய அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். வாக்கெடுப்பு யோசனைகள் (என்ன தலைப்பு/கேள்வி? விடைகள்/தெரிவுகள் எவை?) இருப்பவர்கள், இந்த இடுகைக்கு மறுமொழி இடுவதன்மூலம் பங்களிக்கலாம். அளிக்கப்படும் யோசனைகளை ஏற்றுக்கொள்ள/மறுக்க/மாற்றியமைக்க நிர்வாகக்குழுவுக்கு உரிமை உண்டு.

மக்களே, இனி உங்கள் சமத்து:-)

விரிவுபடுத்தப்பட்ட தமிழ்மணம் நிர்வாகக் குழு

தமிழ்மணம் நிர்வாகத்தில் ஏற்கனவே செல்வராஜும், மதி கந்தசாமியும் எனக்கு உதவிவந்தார்கள். புதிய வடிவம் நடப்புக்கு வந்தபின் அவர்கள் பங்கெடுக்க சரியான இடைமுகம் அமைக்கத் தாமதமானதால் அவர்கள் முழு அளவில் பங்கெடுக்க இயலாமல் போனது. இப்போது மீண்டும் அவர்கள் இருவரும் முழு அளவில் நமக்கு உதவப் போகிறார்கள்.

அத்துடன், மேலும் இரு நண்பர்களும் நமக்கு நிர்வாகப் பணிகளில் உதவப் போகிறார்கள்: சென்னையிலிருந்து ஐகாரஸ் பிரகாஷ், பெங்களூரிலிருந்து இளவஞ்சி ஆகியோருக்கு அனைவர் சார்பாகவும் நன்றி.

இந்த வலைப்பதிவு தமிழ்மணம் நிர்வாகக் குழுவினர் அனைவரும் பங்கெடுக்கும் ஒன்று. இனி தமிழ்மணம் பற்றிய அறிவிப்புகள், கேள்விகள், விளக்கங்கள் இதன்மூலம் பரிமாறிக்கொள்ளப்படும். மற்ற பதிவுகளைப் போலவே இதுவும் தமிழ்மணம் முகப்பில் மறுமொழி நிலவரம் காட்டுமாறு செய்யப்பட்டிருப்பதால இது தேவையான கவனம் பெறும் என்று நம்புகிறோம்.

அனைவருக்கும் நன்றி. தொடர்ந்த ஒத்துழைப்பை வேண்டுகிறோம்,

நிவாகக் குழு சார்பாக,
-காசி ஆறுமுகம்.