தமிழ்மணம் அறிவிப்புகள்

Wednesday, August 23, 2006

ஒவ்வாத பதிவுகளை நீக்குதல் (தொடர்ச்சி)

தமிழ்மணத்துக்கு ஒவ்வாத பதிவுகளை நீக்குவதற்கான வழிமுறை வரையப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும்வரை, இடைக்காலத்திட்டமாகத் தற்காலிக வழிமுறை நடைமுறையிலிருக்கும்.

தமிழ்மணம் அறிவிப்பு பதிவிலே ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்ததுபோல, தமிழ்மணம் பதிவுகளின் உள்ளடக்கமும் அனுமதிக்கப்படும் பின்னூட்டங்களும் எவ்வாறு இருக்கவேண்டுமெனத் தீர்மானிக்கும் உரிமை எவ்விதத்திலும் அற்றது. ஆனால், தன்னோடு இணைக்கப்படும் பதிவுகள் தமிழ்மணத்தின் விதிகளுக்கு ஒவ்வாதன என்று உணரப்படும் நிலையிலே அவற்றினைத் தன் தொடுப்பிலிருந்து விலக்கிக்கொள்ள முழு உரிமையும் தமிழ்மணத்துக்கு உண்டு.

ஏற்கனவே சுட்டிக்காட்டியதுபோல, எக்காலகட்டத்திலும் தமிழ்மணத்தின் முடிவே இறுதியானதென்றபோதுங்கூட, வெளிப்படையாக ஒரு பதிவினை நீக்க வேண்டுமெனவும் ஏன் நீக்கக்கூடாதெனவும் கருத்துகளையும் தன்னிலை விளக்கத்தினையும் முன்வைக்கும் வழிமுறைகளைத் தமிழ்மணம் வடிவமைக்கின்றது. அது நடைமுறைக்கு வரும்வரையிலான இடைக்காலகட்டத்திலே, தமிழ்மணம் தன் தொடுப்புக்கு ஒவ்வாது என்று எண்ணும் பதிவு அலகுகளைப் பதிவருக்கு அவர் விரும்பினால், அகற்ற ஒரு நாள் அவகாசம் கொடுக்கும். பதிவலகுகளை விலக்க முன்னர் அப்பதிவலகுகள் ஏன் விலக்கப்படுகின்றன என்பதற்கான விளக்கத்தினைச் சுருக்கமாகத் தமிழ்மணம் கட்டாயம் தரும். தன் பதிவலகுகளின் உள்ளடக்கம், சொற்பயன்பாடு, அமைப்பு, ஒலிப்பு ஆகியவற்றிலே பதிவரின் விளக்கம் நிச்சயமாக வரவேற்கப்படும். விளக்கம் தமிழ்மணத்திற்குத் திருப்தி தராத நிலையிலே அவர் அவ்வாறு அகற்றாத பட்சத்திலே, தமிழ்மணம் அனைத்துப்பதிவர்களுக்கும் பயனர்கையேட்டிலே அளித்த விதிமுறைகளின்படி அக்குறிப்பிட்ட பதிவலகுகளைத் தன் திரட்டித்தொடுப்பிலிருந்து விலக்கும். எந்நிலையிலும் தமிழ்மணத்தின் முடிவே இறுதியானதாகும்.

உங்கள் புரிதலுக்கும் தொடர்ந்து காட்டும் ஒத்துழைப்புக்கும் நன்றி.

===================================================================

விலக்க வேண்டிக்கொள்ளும் பதிவலகின் பதிவருக்குக் கீழே தரப்பட்ட விபரங்கள் அறிவிக்கப்படும்.

தமிழ்மணம் உங்களின் கீழ்க்கண்டபதிவினை ஒரு நாளுக்குள் விலத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது

பதிவு:
இடப்பட்ட நாள்:
விலக்கலுக்கு முன்வைக்கப்படும் காரணம்:
பதிவரே விலக்குவதற்கான இறுதிநாள்:


=============================================================

இச்செயற்றிட்டத்தின்படி இதுவரை இரண்டு பதிவலகுகளை விலத்திக்கொள்ளுமாறு தமிழ்மணம் கேட்டிருக்கின்றது. இவ்விருபதிவுகளும் சகபதிவர்களினால் அப்பதிவுகள் தமிழ்மணத்திலே இணைக்கப்படத் தகுதியற்றவை என முறையீடு செய்யப்பட்ட பதிவுகளிலிருந்து தமிழ்மணம் தன் தொடுப்புக்குத் தகுதியற்றவை என்று வகை பிரித்தவையாகும்.

தமிழ்மணம்

Monday, August 21, 2006

ஒவ்வாத பதிவுகளை நீக்குதல்

தமிழ்மணத்தின் நோக்கு தமிழ்ப்பதிவுகளிலே சிறந்தும் நற்போக்கிலுமுள்ள கூறுகளைத் திரட்டுவதாகும். ஆனால், எவ்வகையிலும் தமிழ்மணத்திலே தோன்றும் தனியாள் பதிவுகளின் உள்ளடக்கம், தொனியினைக் கட்டுப்படுத்தும் வல்லமையோ, பண்பாட்டுக்காவலராய்ச் செயல்படும் நோக்கமோ அற்றது. அதனால், தமிழ்மணத்திலே பதிவு செய்யப்பட்ட பதிவுகளைத் திரட்டுவது தவிர, தமிழ்மணம் எவ்வகையிலும் பதிவாளர்களின் பதிவுகளுக்கோ அவற்றிலே வரும் பின்னூட்டங்களுக்கோ பொறுப்பாகமுடியாது.

பதிவுகள், பின்னூட்டங்களின் உள்ளடக்கங்களுக்கு அவற்றை எழுதுபவர்களின் நேர்மையையும் பொறுப்புணர்வும் மட்டுமே அடிப்படைகளாக இருக்கமுடியுமென தமிழ்மணம் நம்புகின்றது. ஆனால், திரட்டி என்ற அளவிலே, தமிழ்மணம் தான் சேர்த்துக்கொள்ளும் பதிவுகளிலே அடிப்படையாக சில கூறுகளை எதிர்பார்க்கின்றது. இது குறித்து தமிழ்மணம் பயனர்கள் கையேடு தெளிவாக வரையறுத்திருக்கின்றது.

"thamizmanam.com reserves the right to set out its own norms for acceptance including, but not limited to, nature of content, language and frequency of posting. A blog accepted for listing at the submission may be delisted anytime later based on such norms. In this regard, thamizmanam.com's decison is final. Bloggers whose contents are shown here as previews are requested not to post content that is slanderous, illegal, incisive of dangerous acts, stories inciting terror and violence, or in violation of copyright law."

அண்மையில் இரு பதிவர்களின் சில பதிவுகள் சக பதிவர்களைக் கண்ணியக்குறைவாகத் தாக்கியிருப்பதால் அவற்றினை நீக்கும்படி பதிவர்கள் இருவர் தமிழ்மணத்தின் முறையீட்டு வசதியைப் பயன்படுத்திக் கேட்டிருந்தனர். மேலே சுட்டியிருப்பதுபோல, தமிழ்மணத்திற்கு இப்பதிவுகள் பொருத்தமற்றவை என்று தோன்றினால் நீக்கும் உரிமை முற்றாக இருப்பினுங்கூட, முடிவெடுப்பதிலே தன் அங்கமான பதிவர்களின் கருத்துகளையும் உள் வாங்க தமிழ்மணம் விரும்புகிறது.

தமிழ்மணத்திலேயிருந்து ஒரு தனிப்பதிவை நீக்குவதா, தொடர்ந்து வைத்திருப்பதா என்பதிலே குறிப்பிட்ட பதிவினை இட்டவர், முறையிட்டவர் உட்பட தமிழ்மணத்திலே தம்மைப் பதிவு செய்த எந்தப்பதிவரும் தனது கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்க ஒரு மட்டுறுத்தப்பட்ட வசதியை ஏற்படுத்தும் சாத்தியத்தினைத் தமிழ்மணம் ஆராய்கிறது.

இவ்வசதி நடைமுறைக்கு வரும்போது, தொடர்ந்தும் தமிழ்மணத்தின் முடிவே இறுதிமுடிவானபோதுங்கூட, தமது தமிழ்மணத்துக்கு ஒவ்வாதது எனச் சுட்டப்படும் ஒரு பதிவினை நீக்குவதிலோ தொடர்ந்து இருக்கவைப்பதிலோ பதிவர்களும் பங்கெடுக்கமுடியும்.

இது தொடர்பான செயல்முறை இரு வாரங்களுக்குள்ளே விபரமாக இப்பதிவிலே வெளியிடப்படும்.

தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.