தமிழ்மணம் அறிவிப்புகள்

Wednesday, April 18, 2007

விலக்கப்பட்ட பதிவுகள்

தமிழ்மணத்தின் பயனர் விதிகள் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி தனக்கு தெரியவரும் பதிவர்களின் தகவல்களை அமெரிக்க நீதித்துறையின் ஆணையில்லாதவிடத்து எவருடனும் எக்காரணத்தை முன்னிட்டும் பகிர்ந்துகொள்வதில்லை என்பதனை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம்

தமிழ்மணத்தில் யார் யார் என்னென்ன பணிகள் செய்கிறார்கள் என்பதனை, எம் தார்மீகக் காரணத்திற்கப்பால், கேள்வி கேட்பர்களுக்கெல்லாம் விளக்கிக்கொண்டிருக்க இயலாது என்பதையும் தெளிவாக்கியுள்ளோம்.

இந்த இரண்டு வெவ்வேறு விஷயங்களைக் குழப்பிக்கொண்டு கேட்கப்படும் குறுக்குக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் அவசியம் இல்லை என்றே கருதுகிறோம்.

தமிழ்மணம்-பதிவர்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கை ஒன்றே பதிவர்கள் தமிழ்மணத்தில் இணைவதற்கும், தமிழ்மணம் பதிவர்களை இணைத்துக்கொள்வதற்கும் அடிப்படை. இதைத் தவிர தமிழ்மணத்தைப் பொறுத்தவரையில் வேறெந்த காரணமும் இல்லை. தமிழ்மணத்தின் மீது நம்பிக்கையிழந்த பதிவர்கள் தமிழ்மணத்தில் தொடர்வது அவர்களின் மனவமைதியையும் கெடுக்கும். தமிழ்மணத்தின் வளர்ச்சிக்கும் ஊறு விளைவிக்கும்.

பதிவர் அரவிந்தன் நீலகண்டன் எமது முந்தைய இடுகையில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் வாயிலாகவும், தன் பதிவில் வெளியிட்டுள்ள இடுகை, அதில் அனுமதித்துள்ள பின்னூட்டங்கள் வாயிலாகவும் தமிழ்மணத்தின் மீதான தன் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியிருப்பதாகவே உறுதியாக நம்புகிறோம். அதேபோல அவர் தமிழ்மணத்திற்கெதிரான நச்சுப் பிரச்சாரத்தை நிறுத்துவார் என்ற நம்பிக்கை எமக்கும் இல்லாததாலும், அத்தகைய பிரச்சாரத்திற்கு தமிழ்மணத்தையே பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டும் அவருடைய பதிவு தமிழ்மணத்திலிருந்து விலக்கப்படுகிறது.

பதிவர் ஆதிசேஷன் வெளியிட்டுவரும் பின்னூட்டங்கள் சில தனிநபர்கள் மீதான வரம்பு மீறியத் தாக்குதலாக இருப்பதை முன்னிட்டு அவருக்கு மின்னஞ்சல்கள் மூலமாகவும், இடுகைகளை நீக்கியும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்திருக்கிறோம். இருப்பினும் அத்தகைய வரம்பு மீறிய பின்னூட்டங்களை அவர் தொடர்ந்து அனுமதித்துக்கொண்டிருப்பதால் அவருடைய பதிவு தமிழ்மணத்திலிருந்து விலக்கப்படுகிறது.

பதிவர்களின் புரிதலுக்கும், தொடர்ந்த ஒத்துழைப்புக்கும் நன்றி.

அன்புடன்,
தமிழ்மணம் நிர்வாகம்

Saturday, April 14, 2007

தமிழ்மணத்தின் மீதான ஆதாரமற்ற அவதூறுகளை எதிர்கொள்ளல்

அண்மைக்காலமாக தமிழ்மணத்தின் மீதான ஆக்கபூர்வமான விமர்சனங்கள் குறைந்து ஆதாரமில்லாது பழி சுமத்துவது சில பதிவர்களின் இடுகைகளிலும் பின்னூட்டங்களிலும் அதிகரித்து வருகிறது. தமிழ்மணம், டிஎம்ஐ ஆகியவற்றின்மீது இக்குற்றச்சாட்டுகளை அள்ளிவீசும் இடுகைகளிலும் பின்னூட்டங்களிலும் ஒரு திட்டமிட்டு ஒருங்கமைக்கப்பட்ட தாக்குதலும் நோக்கும் இருப்பதை எம்மைப்போலவே பதிவர்களும் உணர்ந்திருப்பார்கள். தன்மீதான நேர்மையான, முறையான ஆதாரங்களுடனான விமர்சனங்களை, அவை எவையாயினும் தமிழ்மணம் என்றுமே வரவேற்கிறது. நியாயமான விமர்சனங்களை கருத்திலெடுத்துத் தொடர்ந்து குறைகளெனப்பட்டவற்றைக் களைந்து, தளத்தையும் சேவைகளையும் மேம்படுத்தி வருகிறது. ஆனால், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கண்டு இனி வாளாவிருப்பதில்லை என தமிழ்மணம் முடிவெடுத்திருக்கிறது. இதுவரை சுமத்தப்பட்ட பழிகளில் மிகப் பெரிய அவதூறாக பதிவர் நேசகுமார் "போலி பொன்ஸ், ஜெயராமன், ஆரோக்கியம், திலகவதி ஐபிஎஸ், தமிழ்மணம்...." என்ற தலைப்பில் எழுதியுள்ள இடுகையையும், அங்கே அவர் அனுமதித்துள்ள பின்னூட்டங்களையும் தமிழ்மணம் கருதுகிறது. அவ்விடுகையில் நேசகுமார் எழுதியுள்ள "தமிழ்மணத்தின் புதிய நிர்வாகிகள், அவரது ஐபி தகவல்களை வெளியிட்டு அவரை மாட்டிவிட்டுவிட்டார்கள் என்று எனக்கு ஒரு மடலும் வந்தது" என்கிற வரி அபத்தமானது மட்டுமல்ல, ஆதாரம் எதையுமே வெளிப்படையாக முன்வைக்காது பொய்யினைத் திட்டமிட்டுப் பரப்பும் செயலுமாகும்.

இக்குற்றச்சாட்டுக்கு, பதிவர் நேசகுமார் தன்னிடமுள்ள ஆதாரத்தை இருபத்துநான்கு மணிநேரத்துள்ளே வெளிப்படையாக, முழுமையாக, தன் பதிவிலே காட்ட வேண்டும். இல்லையேல், தன்னிடம் ஆதாரமில்லை என்று ஒப்புக்கொண்டு, தன்னுடைய குற்றச்சாட்டிற்கும், தன் பதிவில் அனுமதித்துள்ள பின்னூட்டங்களில் வீசப்பட்டுள்ள தமிழ்மணத்தின் மீதான எல்லையற்ற அவதூறுகளுக்கும் தார்மீகப் பொறுப்பேற்று, அவற்றை நீக்கிவிட்டு பகிரங்கமாக வருத்தமும் தெரிவிக்க வேண்டும். அடுத்த 24 மணி நேரத்திற்குள் இது செய்யப்படாவிட்டால் நேசகுமாரின் பதிவு தமிழ்மணம் திரட்டியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்பதை இங்கே தெரிவிக்கின்றோம் (15 ஏப்ரல் 2007, 10:00 முற்பகல் அமெரிக்கக்கிழக்குக்கரைநேரம்). இதுபோன்ற, வேண்டிய ஆதாரங்களை முன்வைக்காது அவதூறுகளைத் தமிழ்மணம் மீது பதிவுமூலமும் பின்னூட்டங்கள் ஊடாகவும் பரப்பும் ஏனைய பதிவுகளும் எதிர்காலத்திலே நீக்கப்படுமென்பதைத் தெளிவாக அறியத்தருகின்றோம்.

இது போதாதென்று "தமிழ்மணம் கைமாறிவிட்ட நிலையில், இப்போது தமிழ்மணத்தை நிர்வகிப்பவர்கள் தயவுசெய்து இந்தப் பிரச்சினையில் அவர்களின் பங்கு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதுவும் தமிழ்மண கருவிப்பட்டை இருக்கும்போது நமது ஒவ்வொரு செயலும் தமிழ்மணத்தால் பதிவு செய்யப்படும் வாய்ப்பிருக்கின்றது. இந்த தகவல்கள் யார் யாருடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன, who is privy to all these details, யாரெல்லாம் டெக்னிக்கல் விஷயங்களை பார்த்துக் கொள்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது நல்லது" என்று ஆலோசனையும் வழங்கியுள்ளார். இதற்குப்பின்னால், தமிழ்மணம் ஐபி முகவரிகளைச் சில பதிவர்களுக்கு வழங்கி விட்டதாகவே அறிவித்துக்கொண்டு, தமிழ்மணம்மீது திட்டமிட்ட அவதூறுகளை விசிறியிருக்கும் பின்னூட்டங்களையும் எதுவிதமான தார்மீகமுரணும் கூச்சமுமின்றி அனுமதித்திருக்கின்றார்.

பதிவர்கள் தங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க விழையும்போது, "Terms of Use" மற்றும் "Policy of Privacy" பக்கங்களைப் படித்து, விதிகளை ஏற்றுக்கொண்ட பின்னரே பதிவை சமர்ப்பிக்கிறார்கள் என்பது தமிழ்மணத்தில் இணைந்திருக்கும் அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கும். "Policy of Privacy" பக்கத்தில் பதிவர்களின் அந்தரங்கத் தகவல் சேகரிப்பது பற்றியும், அவை முறையான விண்ணப்பமூடே சட்டம் கொணரக் கேட்டாலன்றி, எந்நிலையிலுங்கூட, எவருடனும் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"Each time a visitor comes to thamizmanam.com site, we collect the visitor's domain name/IP Address, referral data and browser/platform type. thamizmanam.com also counts, tracks, and aggregates the visitor's activity into our analysis of general traffic flow. thamizmanam.com aggregates this information to determine trends, preferences, reading patterns, and demographics of the user community in general. Occasionally we may provide this aggregate data to the sponsors and business partners. Specific information such as name, IP address, email address, or other contact information will never be shared with anyone unless ordered by a court of law."

தமிழ்மணத்தினை நடத்தும் Tamil Media International, LLC என்ற நிறுவனம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பதிவு செய்யப்பட்டு, அந்நாட்டுச்சட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்படும் நிறுவனம். அந்நாட்டின் சட்டங்கள் வழங்கும் பேச்சுரிமை, தனிநபர் தகவல் காப்பு விதிகள் முற்று முழுதாக பின்பற்றப்படுகின்றன என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கின்றோம்; தெளிவுபடுத்துகிறோம். இந்நிறுவனத்தினை நடத்துகின்றவர்களின் பெயர்கள் இத்தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இதற்குமேல் ஒரு பதிவருக்குத் தமிழ்மணத்தின் உள்ளமைப்பு, நிர்வாகம் தொடர்பாக எவ்விதமான மேலதிகத்தகவலும் தேவையில்லை, அப்படியாகத் தரவேண்டிய அவசியமும் எமக்கில்லை என்று கருதுகிறோம். தமிழ்மணத்தின் திட்டங்கள் நிர்வாகக் குழுவுக்குள் நாட்டின் சட்டங்களுக்கும் நிறுவன விதிகளுக்கும் அமைய விவாதிக்கப்பட்டு , முடிவுகள் எடுக்கப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன. எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும். அதற்குமேல், எமது செயற்பாடுகள் பற்றி, முறையான வேண்டுகோளுடன் வரும் அமெரிக்கநீதித்துறையின் வினாக்களுக்கு அப்பால் எவருக்கும் நாம் விபரித்துக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை.

மேலும், கடந்த காலத்திலே எமது செயற்பாடுகளை அவதானித்தவர்களுக்கு நிறுவனம் என்ற நிலையிலே நாம் எத்துணை விதிமுறைகளின் அடிப்படையிலே ஒவ்வொரு செயற்பாட்டிலும் கவனம் எடுத்து இயங்குகின்றோம் என்பதைக் காணமுடிந்திருக்கும். பதிவர்களிடையேயான பிணக்குகளிலும் பிணைவுகளிலும் தமிழ்மணம் தலையிடுவதில்லையென்பதையும் அதன் காரணமாகவே தொடர்ந்து வெவ்வேறு சார்புகளுடனான பதிவர்கள் சிலராலே தொடர்ந்து தாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பதையுங்கூட நிதானத்துடனும் நேர்மையுடனும் அணுகும் பதிவர்கள் கண்டிருப்பீர்கள்.

தமிழ்மணம்_உதவி/தகவல் பகுதியிலே மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டு, மேற்கோள் காட்டப்பட்டுள்ள தமிழ்மணத்தின் இந்த உறுதிமொழியினைச் சேரும்போது வாசித்த பின்னும் நம்பிக்கையில்லாத பதிவர்கள், எவ்விதமான நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் தமிழ்மணத்திலே சேர்ந்திருந்தாலுங்கூட, இப்போதுங்கூட, தங்கள் பதிவுகளை நீக்கிக்கொள்ள விண்ணப்பித்தால் அப்பதிவுகளை நீக்குவதில் எமக்கு எந்தவித பிரச்சினையுமில்லை. அப்படி விண்ணப்பிக்காமல் நேசகுமாரின் இடுகையில் உள்ளது போன்று ஆதாரமற்ற அவதூறுகளைத் தாங்கி இடுகைகள் வந்தால் அவற்றை எழுதிய பதிவர்களின் நம்பிக்கையின்மையைக் கருத்தில் கொண்டும் தமிழ்மணத்தின் நலனைக் கருத்திலே கொண்டும் சிறு அறிவிப்புகளுடன் அப்பதிவுகளை நாங்களாகவே விரைந்து நீக்குவது குறித்தும் பரிசீலிப்போம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ்மணத்தில் தொடர்பவர்கள் "Terms of Use" பக்கத்தில் உள்ள விதிகளுக்குக் கட்டுப்பட்டும், "Policy of Privacy" பக்கத்தில் அளித்திருக்கும் உறுதிமொழி மீது நம்பிக்கை வைத்தும் தொடர்கிறார்கள் என்று நம்புகிறோம். பதிவர்களுக்கும், தமிழ்மணத்திற்கும் இடையிலான நம்பிக்கையும், புரிதலும் ஆக்கபூர்வமான விமர்சனங்களுமே இத்திரட்டியைத் தொடர்ந்து இயக்கவும், மேம்படுத்தவும் எம்மை ஊக்குவிக்கும். தமிழ்மணத்தினை, டிஎம்ஐ நிறுவனத்தினை அமைத்து அதன்கீழே தன்னாவர்த்துடன் இலாபநோக்கு எதுவுமின்றி நடந்தும் அங்கத்தவர்களுக்கும் குடும்பம், தொழில், தமக்கென்றும் ஒரு பதிவினைப் பதியும் ஈடுபாடு என்பன உண்டு என்பதையோ, குறைந்தது இருக்கக்கூடும் என்பதையோ பதிவர்கள் தமிழ்மணத்தினைப் பயன்படுத்தும் ஏதாவதொரு கணத்திலேனும் எண்ணியிருக்கக்கூடும். எமது குடும்பம், தொழில் சார்ந்த அன்றாட வாழ்க்கை அழுத்தங்களுக்கிடையேயும் பரந்துபட்ட வலைப்பதிவுத்தமிழ்ச் சமூகத்தின் மீதுள்ள அக்கறையை முதன்மைக்குறிக்கோளாகக் கொண்டு அன்றாடம் எம் பொருள், நேரம், ஆற்றலைச் செலவிட்டு, இச்சேவையினை வழங்கி வருகிறோம் என்பதைப் பெரும்பாலான பதிவர்கள் புரிந்திருப்பார்கள் என உளப்பூர்வமாக நம்புகிறோம். இந்நிலையில் தொடர்ந்தும் இதுபோன்ற டிஎம்ஐ/ தமிழ்மணம் மீதான ஆதாரமற்ற அவதூறுகளை கருத்துச்சுதந்திரம் என்ற போர்வையின்கீழே தமது ஆதங்கங்களுக்கும் பயங்களுக்கும் வெறுப்புகளுக்கும் மறைந்துகொள்ளுதல்களுக்கும் வடிகாலாகவும் கேடயங்களாகவும் அள்ளிவீசுதலைத் தொடர்ந்தும் அனுமதித்தல், வரப்போகும் வலைப்பதிவுச்சந்ததியினருக்குத் தமிழ்மணம் பற்றி மிகவும் தவறான கருத்துகளைத் திணிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையாகவே காண்கிறோம். இதனைத் தொடர்ந்து அனுமதிப்பதன் மூலம், இத்தகைய தரம் தாழ்ந்த நடைமுறை இயல்பே என்ற தவறான கருத்தினைப் பரப்பவும் வேர்விழுத்தவும் நாம் விரும்பவில்லை.

தானியங்கு வலைத்திரட்டிகளைத் தொழில்நுட்பம் தெரிந்த எவரும், ஏன் வருங்காலத்திலே தெரியாதவர்கள்கூட ஆக்கிவிட்டுப்போகலாம். ஆனால், தான் சார்ந்த சமூகத்தின் நலனை முன்னிட்டு, அதனை மேம்படுத்தும் நோக்குடன் தொடங்கப்பட்ட ஒரு திரட்டி, இப்படியான தன் மீதான சமூகப்பிறழ்வுடனான தொடரும் திட்டமிட்ட ஆதாரமற்ற தாக்குதல்களைக் கருத்துச்சுதந்திரம் என்ற தவறான அர்த்தப்படுத்துதலுடன் 'ஆயிரம் பூக்கள் மலரட்டும்' என்பதாக அனுமதிப்பது, மிகவும் தவறான முன்மாதிரியாகவே இருக்கமுடியும். இத்தகைய காழ்ப்புணர்வுடனான அவதூறுகள் ஒருபோதும் தாம் சொல்லிக்கொள்ளும் கருத்துச்சுதந்திரத்திற்கான மதிப்பினைத் தருவதில்லை. ஒரு தன்னார்வ, தானியங்கித்திரட்டிக்குத் தன்னிலே எத்தனை பதிவுகள் திரட்டப்படுகின்றன என்பதிலும்விட, அதற்கான அடிப்படைநோக்கத்தினை நோக்கி தொடர்ந்தும் நடப்பதுடனான ஒரு சமூகத்தார்மீக கடப்பாடு இருக்கவேண்டுமென முழுமையாக நம்புகிறோம். தமிழ்மணம் வலைத்திரட்டியேயொழிய வலைத்திட்டியோ தாங்கியோ அல்ல.

அதனால், தொடர்ந்தும் இத்தகைய தன்மீதான திட்டமிடப்பட்ட ஆதாரமற்ற அவதூறுகளை எக்காரணம் கொண்டும் தமிழ்மணம் அனுமதிக்காது என்பதினை இப்பதிவு மூலம் உறுதிப்படுத்துகின்றோம்.

Monday, April 09, 2007

தமிழ்மணம் இடுகைகள்: ஏப்ரல் 8 / 9, 2007

இன்று (9, ஏப்ரல் 2007) தமிழ்மணம் தரவுத்தளம் கறையுற்றதால், தரவுத்தளத்தினை ஏப்ரல் 8, 2007 22:56 கிநிநே வேளையிலே இருந்த நிலைக்கு மீளமைக்க நேர்ந்தது. விளைவாக, ஏப்ரல் 8, 22:56 கிநிநே ~ ஏப்ரல் 9, 23:00 கிநிநே [April 8, 22:56 EST ~ April 9, 23:00 EST] பொழுதுக்கு இடைப்பட்ட இடுகைகள் தமிழ்மணத்திலே தற்சமயம் இல்லை. இந்த எதிர்பாராத விளைவிற்குத் தமிழ்மணம் வருந்துகின்றது. பதிவர்கள் தங்கள் பதிவை மறுபடியும் தமிழ்மணத்துக்குச் சமர்ப்பிக்கும்போது, இவ்விடுகைகளைத் தமிழ்மணம் திரட்டிக்கொள்ளும்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

நிர்வாகம்
தமிழ்மணம்

Thursday, April 05, 2007

இடுகைகள் நீக்கம் குறித்த அறிவிப்பு

1.
அனாமதேயமாக தமிழ்மணத்தின் தாய்நிறுவனமான டிஎம்ஐ இனைச் சம்பந்தப்படுத்தி எழுதப்பட்ட பின்னூட்டப்பட இணைப்புகள், பதிவர்கள் ஜடாயு, முகமூடி ஆகியோரின் இடுகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. இவை தங்கள் பெயர்களுக்குக் களங்கம் விளைவிக்க முயல்வதாக இரண்டு பதிவர்கள் தமிழ்மணம் நிர்வாகத்துக்கு முறையீடு செய்திருக்கின்றனர். இம்முறையீட்டின் அடிப்படையிலும் டிஎம்ஐ இன் பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயல்வதன் அடிப்படையிலும் இந்த இணைப்புகளைத் தம் இடுகைகளிலிருந்து நீக்குமாறு தமிழ்மணம் நிர்வாகம் இரு பதிவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றது.

நீக்கப்படாதவிடத்து, சம்பந்தப்பட்ட இடுகைகளுக்கான இணைப்புகள் தமிழ்மணம் களஞ்சியத்திலிருந்து நீக்கப்படுமென அறியத் தருகிறோம்.

2.
தமிழ்மணம் திரட்டியிலிருந்து விலக்கப்பட்ட 'விட்டது சிகப்பு' என்ற பதிவரின் இடுகையை பதிவர் ஆதிசேஷன் பதிவில் மீள்பதிப்பு செய்துள்ளதாக எமக்கு முறையீடுகள் வந்துள்ளன. திரட்டியிலிருந்து விதிமுறை மீறல்களின் காரணமாக விலக்கப்பட்ட பதிவர்களின் இடுகைகளை வேறு வழிகளில் தமிழ்மணத்தில் இணைப்பதை அனுமதிக்க இயலாது. அதனால், இதை அறிந்த பதிவர் குறிப்பிட்ட இடுகையை அவர் பதிவிலிருந்து நீக்காவிடில் தமிழ்மணம் நிர்வாகம் அவ்விடுகையைத் திரட்டலிலிருந்து நீக்கி அறிவிக்கும்.

தொடர்ந்தும் இதேபோல, விலக்கப்பட்ட பதிவுகளின் இடுகைகள் வேறு பதிவுகளிலே இடப்படுவது அறியத்தரப்படின், அப்படியான இடுகைகளும் தமிழ்மணம் திரட்டுதலிலேயிருந்து நீக்கப்படும் என்பதையும் அறிவிக்கக்கடப்பாடுள்ளோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

நிர்வாகம்
தமிழ்மணம்

Sunday, April 01, 2007

தமிழ்மணம் சேவை வழமைக்குத் திரும்பியிருக்கிறது

தமிழ்மணம் மீண்டும் வழக்கம்போலச் செயற்படுகிறது.

தமிழ்மணத்தினைப் பயன்படுத்தும்போது, சேவையின் எதிர்வினையில் (response) சில காலமாகச் சற்றே தொய்வு ஏற்பட்டிருந்ததைப் பயனர்கள் உணர்ந்திருப்பீர்கள். தமிழ்மணத்திற்கு வருகை தரும் பயனர்களின் எண்ணிக்கை தவிர வேறு சில தொழில்நுட்ப காரணங்களாலும் இந்த தொய்வு ஏற்பட்டிருந்தது.

இதனைச் சரி செய்ய தமிழ்மணம் ஒரு மேம்பட்ட வழங்கிக்கு நேற்று இரவு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் தமிழ்மணம் வழங்கியின் சேவையில் பல மணி நேரம் பாதிப்பு இருந்தது. இந்த சிரமத்திற்குத் தமிழ்மணம் வருந்துகிறது

தமிழ்மணத்தின் அனைத்து சேவைகளும் தற்பொழுது சரியாகச் செயற்படுகின்றன. வேறு ஏதேனும் பிரச்சனை இருப்பதாக அறிந்தால், இந்தப் பதிவில் பின்னூட்டம் மூலம் தெரிவிக்கலாம்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி.

நிர்வாகம்
தமிழ்மணம்

தற்காலிகமாக, தமிழ்மணத்திலே இடுகை உள்ளிடும் வழி

தமிழ்மணத்தில் புதிய இடுகைகளையும், மறுமொழிகளையும் ஏற்று கொள்வதில் தற்பொழுது தற்காலிகத்தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனைக் சரி செய்ய எமது தொழில்நுட்பக்குழு முனைந்து கொண்டிருக்கிறது. தமிழ்மணம் சேவை சரி செய்யப்பட்டவுடன் இது குறித்து அறியத் தருகிறோம்

சேவையில் ஏற்பட்டிருக்கும் தடங்கலுக்கு வருந்துகிறோம்.

இந்தப் பிரச்சனை சரி செய்யப்படும் வரையில் புதிய இடுகைகளை "யு.ஆர்.எல். இடுக" [தமிழ்மணம் முன்றல் இடதுமேல்மூலை வலைச்சுட்டி வழங்குகளம்] ஊடாக மூலமாக தமிழ்மணத்திற்கு வழங்கலாம்

Blogs can still be added to thamizmaNam through "யு.ஆர்.எல். இடுக" on the Front thamizmaNam Top Left.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி

நிர்வாகம்
தமிழ்மணம்