தமிழ்மணம் அறிவிப்புகள்

Monday, May 29, 2006

இடுகைகளுக்குப் பதிவர் குறிச்சொல் (unique tag) தரும் வசதி

தற்போது இடுகைகளை தலைப்புகள்(துறைகள்) வாரியாக வகைபிரிக்கும் வசதியை தமிழ்மணம் அளிப்பதை பலரும் அறிவோம். இதன்மூலம் 16 வகையான தலைப்புகளின்கீழ் எந்த ஒரு இடுகையையும் அளிக்கவும், பிறகு தலைப்புகள்வாரியாகப் பிரித்து அறிய விரும்புபவர் அதை எளிதில் செய்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளதும் அறிந்திருப்போம்.

ஒரு நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடுகைகள் எழுதப்படும் இன்றைய சூழலில், சில மணிகளே தமிழ்மணத்தின் முகப்பில் ஒரு இடுகை நிலைக்க முடிகிறது. அதற்குமேல் வாசிக்க, 'இன்று' என்ற பக்கத்தில், ஒரு செய்தித்தளத்தின் முகப்பைப் போல கடந்த 24 மணிநேரத்தில் எழுதப்பட்ட அனைத்து இடுகைகளும் தொகுக்கப்பட்டுக் கிடைக்கின்றனவே, அங்கு செல்லலாம். அல்லது 'சென்ற நாட்கள்' என்ற பக்கத்தில், கடந்த மாதங்களில் எந்த ஒரு நாளையும் தேர்ந்தெடுத்து அன்று எழுதப்பட்ட அனைத்து இடுகைகளையும் காணலாம். இங்கு விருப்பப்பட்ட தலைப்புகளை ம்ட்டும் தேர்ந்தெடுத்து அவற்றின்கீழ் வரும் இடுகைகளை வாசிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

சில நாட்கள் தொடர்ந்தாற்போல ஒரு குறிப்பிட்ட பொருளை மையமாக வைத்து பலரும் எழுதுவதைப் பார்க்கிறோம். உதாரணமாக, புத்தக மீமீ, நாலுநாலு, தேர்தல் அலசல், இட ஒதுக்கீடு, மதுமிதாவின் புத்தகம், தேர்தல் 2060 கதை, என்பனவற்றைச் சொல்லலாம். இவற்றை நிலையான 16 தலைப்புகளுக்குள் அடக்கிவிட்டாலும், குறிப்பிட்ட பொருளின்மேல் எழுதப்பட்ட சுட்டிகளை மட்டும் தேடி எடுப்பது கடினம். 'இடுகைகளில் தேட' என்ற பக்கம் ஓரளவுக்கே இந்தத் தருணத்தில் உதவமுடியும். இத்தகைய நிலையில் உதவ, பதிவர்களே உருவாக்கும் குறிச்சொற்கள் தர தமிழ்மணத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல், வலைப்பதிவர் தங்கள் இடுகையை தமிழ்மணத்தில் சேர்க்கும்போது, வகைபிரித்தலுடன், கூடவே ஒரு குறிச்சொல் இடும் பெட்டியும் இருக்கும். ஏற்கனவே நடப்பில் உள்ளசொற்களிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம், அல்லது புது சொல்லை நேரடியாக உள்ளிடலாம். இது ஒருவகையில் டெக்னோரட்டி டேக் (Technorati tag) போலத்தான். ஆனால் இதில் பெரிதாக எந்த வேலையும் செய்யாமல் எளிதில் உங்கள் இடுகைக்கு நீங்கள் டேக் இடுகிறீர்கள். ஒரு குறிச்சொல்லின் 'பிரபலம்' குறிப்பிட்ட காலத்தில் (இப்போது கடந்த 7 நாட்கள்) எத்தனை இடுகைகள் அதே குறிச்சொல்லைப் பயன்படுத்துகின்றன என்பதையும், எத்தனை முறை ஒரு சாதாரணப் பயனர் அந்த குறிச்சொல்லின் கீழ் உள்ள இடுகைகள் பட்டியலைப் பார்வையிடுகிறார் என்ற இரண்டையும் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் இந்த குறிச்சொற்கள் தனிக்கட்டத்தில் சுட்டிகளாகக் காட்டப்படுகின்றன. மேற்சொன்ன 'பிரபல'த்தைப் பொறுத்து அவற்றின் எழுத்து உயரங்கள் தானாகத் தீர்மானிக்கப்படுகின்றன.

இது சோதனை முறையில் இன்று முதல் வேலை செய்யத் தொடங்கும். சில நாள் பயனுக்குப் பின் தேவைப்படும் மாறுதல்கள் செய்யப்படும். இந்தப் புதிய வசதியைப் பயன்படுத்திப் பார்க்க அனைத்து வலைப்பதிவர்கள் மற்றும் பயனர்களை அழைக்கிறேன்.

Wednesday, May 17, 2006

தமிழ்மணம் மறுமொழி நிலவரம் சேவை: வ. கே. கே.

இது இயங்கத்தேவையான அடிப்படைக் கட்டமைப்புகள்?

  • சரியாக நிறுவப்பட்ட 'பதிவு' கருவிப்பட்டை
  • மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்திருத்தல்
  • ... அதைத் தமிழ்மணமும் *அறிந்திருத்தல்*

மறுமொழி நிலவரம் காட்டப்படவில்லை என்பவர்கள் முதலில் சோதித்துப்பார்க்க வேண்டியது?
தங்கள் பதிவில் *இடுகைப் பக்கத்தில்* பதிவு கருவிப்பட்டை சரியாகத் தெரிகிறதா என்பது.

கருவிப்பட்டை தெரியாவிட்டால் அதைத் தெரிய வைக்க என்ன செய்யவேண்டும்?
இங்கே சொல்லப்பட்டிருக்கிறது.

கருவிப்பட்டை தெரிந்தால், அடுத்து சோதித்துப் பார்க்க வேண்டியது?மறுமொழி மட்டுறுத்தல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா என்பது. அதை எப்படிச் செய்வது என்பதற்கு இங்கே பார்க்கவும்.

சரி, செய்துவிட்டேன், பிறகு?
நீங்கள் மட்டுறுத்தல் செய்ய ஆரம்பித்தவுடனே தமிழ்மணம் தெரிந்துகொள்ள எந்த ஞானதிருஷ்டியும் இல்லாததால் ;-) நீங்களாக அறிவிக்கவேண்டும். அறிவித்ததை ஒருவர் பார்த்து, சம்பந்தப்பட்ட பதிவுக்கு வந்து, மறுமொழியிட முயற்சித்து, உண்மையிலேயே மட்டுறுத்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்து, பின்னரே தமிழ்மணம் மறுமொழிச் சேவையை ஏலுமாக்கமுடியும். இதுநாள் வரை மின்னஞ்சல் அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தோம், இனி அதற்குப் பதிலாக இந்த இடுகையில் மறுமொழியாக இடச்சொல்லிக் கேட்கிறோம்.

சரி, தமிழ்மணம் பதிவரது அறிவிப்பை நடைமுறைப்படுத்திவிட்டதா என்று எப்படி அறிந்துகொள்வது?
இங்கே உள்ள வலைப்பதிவுகள் பட்டியலில் மறுமொழி 'திரட்டப்படுகிறது/இல்லை' என்று ஒவ்வொரு பதிவிற்கும் காட்டப்படுகிறது. அதை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். இதில் 'திரட்டப்படுகிறது' என்று இருந்தும் மறுமொழி நிலவரம் தெரியவில்லையென்றால், தமிழ்மணம் செய்வதற்கு ஒன்றுமில்லை. உங்கள் நிரல், புரிதல் ஆகியவற்றை இன்னுமொருமுறை சரிபார்க்கவும்.

சரி, இதெல்லாம் செய்தபின்னர் சில சமயம் மறுமொழி நிலவரம் சரியாகக் காட்டப்படுகிறது, சில சமயம் தவறான எண்ணிக்கை தெரிகிறது. சில சமயம் மட்டுறுத்தி அனுமதித்த மறுமொழி பல மணி/நாள் கழித்தே அண்மையில் மறுமொழியப்பட்டதாகக் காட்டப்படுகிறது, இது ஏன்?
இங்கேதான் சற்று சிந்திக்க வேண்டும்:-) ஒருவர் புதிதாக ஒரு இடுகை எழுதியது தமிழ்மணத்துக்கு எப்படித் தெரிகிறது? கருவிப்பட்டை மூலமாகவோ, முகப்புப்பக்கத்தில் உள்ள கட்டம் மூலமாகவோ அவர் அறிவிக்கும்போதுதானே தெரிகிறது? அதுபோலவே ஒரு மறுமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டவுடன் தமிழ்மணத்துக்கு எப்படித் தெரியும் என்று சிந்தித்தால் விடை கிட்டும்.

ப்ளாக்கர்.காம் தளத்தில் மட்டுறுத்தப்பட்ட மறுமொழி விவரம் தமிழ்மணம்.காம் தளத்துக்கு எப்படித் தெரிகிறது?
ஒவ்வொரு முறை ஒரு இடுகைப்பக்கம் உலாவியில் காட்டப்படும்போதும் கருவிப்பட்டை தமிழ்மணத்துக்கு மறுமொழி எண்ணிக்கையை அறிவிப்பதாலேயே இந்த தரவு தமிழ்மணத்துக்குத் தெரிகிறது. ஆகவே இந்தத் தரவு தமிழ்மணத்துக்கு தெரியவெண்டுமானால், மறுமொழியை மட்டுறுத்தி அனுமதித்ததோடே, ஒருமுறையாவது தங்கள் இடுகைப் பக்கத்தை உலாவியில் தெரியச் செய்யவேண்டும். இதைச் செய்யாவிட்டால் அடுத்து ஒருவர் 2 நாள் கழித்துத்தான் அந்தப் பக்கத்தைப் பார்ப்பதாகக் கொண்டால் 2 நாள் கழித்துத்தான் தமிழ்மணத்துக்கு அந்தப் புதிய மறுமொழி நிலவரம் தெரியவரும்.

என் பதிவுகளில் இருக்கும் பின்னூட்டத்தின் எண்ணிக்கைக்கும், தமிழ்மணத்தில் தெரியும் எண்ணிகையிலும் வேறுபாடு உள்ளது. இது ஏன்?
உலாவிகளின் அமைப்பினாலும், இணையத்தொடர்புக்கான ப்ராக்ஸி சர்வர்கள் அமைப்பினாலும் (caching) ஒருவர் பழைய பக்கத்தையே மீண்டும் வாசிக்க வாய்ப்பிருக்கிறது. அப்போது பழைய மறுமொழி எண்ணிக்கையே தமிழ்மணத்துக்கு மீண்டும் வர வாய்ப்பிருக்கிறது. இது ஒரு நுட்பக்குறைபாடு. பொறுத்துத்தான் ஆகவேண்டும்.

Tuesday, May 16, 2006

மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாட்டை அறிவிக்க

பலரும் தாங்கள் மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாட்டை செய்துவிட்டு தமிழ்மணத்துக்கு மடல் அனுப்புவது நடைமுறை. இதில் சில சமயம் பல பதிவுகள் விடுபட்டுவிடுகின்றன. இனிமேல் இந்த இடுகைக்கு மறுமொழிவதன் வாயிலாக அவர்கள் அறிவித்தால் ஓரிடத்தில் இந்த வேண்டுகோள்களைத் தொகுத்து தவறாமல் பதில் நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும். இங்கே இடப்படும் மறுமொழிகள், அவற்றின்மேல் செயல்பட்டவுடன் நீக்கப்படும். இதன்மூலம் காத்திருப்பில் உள்ள வேண்டுகோள்கள் மட்டும் தெரியும். எனவே தமிழ்மணம் நிர்வாகக் குழு அவற்றுக்கு தகுந்த பதில் அளிக்கவோ, செயல்படுத்தவோ முடியும்.

இங்கேயே மறுமொழி மட்டுறுத்தல் பற்றிய கேள்விகளையும் இடலாம். நிர்வாகிகளுக்காகக் காத்திராமல், விடை தெரிந்தவர்கள் பதிலிறுத்து உதவலாம்.

முன்னதாக மறுமொழி நிலவரம் காட்டுதல் பற்றிய வழக்கமாகக் கேட்க்கப்படும் கேள்விகள் இடுகையை வாசித்துவிடுங்கள்.

அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.